ஊடகங்களில் நான் பார்த்த செய்திகளில் என் மனதைத் தாக்கிய செய்திகளின் தொகுப்பு. பாரிய ஊடக உலகில் ஒரு சாதாரணமானவனின் பார்வையில் பட்ட மிகவும் சிறிய துளி இந்தத் தொகுப்பு.
அரசியல்-பிறந்தகம்
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முதன் முதலாக வன்னிக்கு விஜயம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு நடைபெற்று வருகிற மீளமைப்புப் பணிகளை ராஜபக்ச பார்வையிட்டதாகவும், துணுக்காய் பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களைச் சந்தித்து தமிழில் உரையாடியதாயும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவரோடு கூடவே அவரது சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவும், முப்படைகளின் தளபதிகளும், பொலிஸ்மா அதிபரும் போய்வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் அரசியலுக்காக இல்லாமல் உண்மையான நோக்கோடு இதைச் செய்திருந்தார் எனில், ராஜபக்சவுக்கு நன்றிகள். கடைசியாக சிங்கள தேசத்துத் தலைவர் ஒருவர் மக்களைச் சந்தித்து, நம்பிக்கை ஏற்படுத்தி பின்னர் முதுகில் குத்திய அனுபவம் இருப்பதால், (வேறு யார், ரணிலைச் சொல்கிறேன்) எதையும் சந்தேகக் கண்ணோட்டத்தோடுதான் அணுகமுடிகிறது.
இதேவேளை புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னி இருந்தபோது அங்கே பணியாற்றிய அரசு ஊழியர்களைப் பணிக்குத் திரும்புமாறும், இல்லாவிடில் அவ்வாறு திரும்பாதவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் நிறுத்தப்படும் என்றும் வடமாகாண ஆளுனர் சந்திரசிறி தெரிவித்திருக்கிறார். சொந்த இடங்களை விட்டு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்ட இவ்வாறான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ஏற்கனவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தலைவரின் பெற்றோர் பற்றிய ஆனந்த விகடன் செய்தியை வியாபார தந்திரமாக மட்டுமே பார்க்கிறேன். மரணவியாபாரிகள் இப்போதைக்கு ஓயப்போவதில்லை. அந்தப் பிணந்தின்னிகளின் வியாபார தந்திரத்தை நம்மவர்களும் ஊக்குவிப்பது உறுத்துகிறது.
தலைவரின் பெற்றோர் பற்றிய ஆனந்த விகடன் செய்தியை வியாபார தந்திரமாக மட்டுமே பார்க்கிறேன். மரணவியாபாரிகள் இப்போதைக்கு ஓயப்போவதில்லை. அந்தப் பிணந்தின்னிகளின் வியாபார தந்திரத்தை நம்மவர்களும் ஊக்குவிப்பது உறுத்துகிறது.
அரசியல்-புகுந்தகம்
பிரிட்டிஷ் கொலம்பியா (British Colombia) மாகாணத்தின் ஃப்ரேசர் (Fraser) ஆற்றுப் பகுதியில் இருந்த சால்மன் (Salmon) மீன்வளம் திடீரெனக் குறைந்தது பற்றிய விசாரணை ஒன்றை நடத்திமுடிக்க பிரதம மந்திரி ஸ்டீபன் ஹார்ப்பர் உத்தரவிட்டிருக்கிறார். கிட்டத்தட்ட 9 மில்லியன் மீன்கள் பசுபிக் சமுத்திரத்தில் காணாமல் போயிருப்பது கனேடிய மீன்வளத்துறையை ஆட்டம்காண வைத்திருக்கிறது. பல காலமாகவே இது பற்றிய ஒரு விசாரணைக்கு பலதரப்பட்ட அமைப்புகள் கோரி வந்த நிலையில் ஹார்ப்பரின் இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது. வழமையாக காலநிலை மாற்றத்துக்கேற்ப இடம்பெயர்ந்து திரும்பும் இந்த மீன்கள், இம்முறை 10.5 மில்லியன் பசுபிக் கடலில் இருந்து ஃப்ரேசர் ஆற்றுக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் இந்த எண்ணிக்கையின் பத்தில் ஒரு பங்கு மட்டுமே திரும்பியிருப்பது கனேடிய மீன்வளத்துறைய அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்ராரியோ மாநிலத்தின் கல்விக் கட்டணங்களைக் குறைக்குமாறு மாணவர்கள் ஒழுங்கு செய்த ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. வியாழனன்று உச்சக்கட்டமாக ரொரன்ரோ குயீன்ஸ் பார்க்கில் மாபெரும் திரளணியாக 1000 த்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கூடித் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள். கனடாவிலேயே கல்விக்கட்டணங்கள் உயர்ந்த மாநிலமாக விளங்கும் ஒன்ராரியோ, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு இன்மையிலும் முதல் மாநிலமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
அரசியல்-உலகம்
ஐக்கிய அமெரிக்காவின் Texas மாநிலத்தில் Fort Hood இராணுவ முகாமில் பணியாற்றிய மன நல மருத்துவர் மேஜர். நிடால் மலிக் ஹசன் திடீரென நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டும், 30 பேர் காயமடைந்தும் இருக்கிறார்கள். தொழில்ரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லாதவராக அறியப்பட்ட இந்த மனநல மருத்துவரின் தாக்குதல் இந்த வாரம் ‘பெரியண்ணன்' வீட்டில் நடந்த மிகவும் பரபரப்பான சம்பவமாக அமைந்திருக்கிறது. அதுவும் சுட்டவர் முஸ்லிமாக வேறு போய்விட்டதால் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் ஏதாவது நடக்கலாம் என அஞ்சுவதாக ஒபாமா தெரிவித்திருக்கிறார். (இவனே ஐடியா கொடுக்கிறான்). இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடந்து வருகின்றன. ஹசன் சமீபத்தில்தான் இந்த முகாமுக்கு மாற்றலாகி வந்தார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் இது ஒரு பெரிய தாக்குதல் என்பதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், பின்னர் இது ஹசான் தன்னிச்சையாக ஈடுபட்ட ஒரு தாக்குதல் என்று அறிவித்திருக்கிறார்கள். ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ முகாமான Fort Hood இல் நடந்த இந்தத் தாக்குதல், அமெரிக்க-முஸ்லீம் உறவுகளில் இன்னும் பாரிய விரிசலை உருவாக்கும் என்பதுமட்டும் நிச்சயம்.
வணிகம்-பொருளாதாரம்-தொழில்நுட்பம்
ஏறுமுகத்தில் போய்க்கொண்டிருந்த கனேடியப் பொருளாதாரத்துக்கு இந்த வாரம் வெளியான அறிக்கைகள் பேரிடியாக அமைந்திருக்கின்றன. புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாவிடினும், வேலைகள் இழக்கப்படமாட்டாது என பெரிதும் எதிர்வுகூறப்பட்ட ஒக்ரோபர் மாதத்தில்கூட, கனடாவிலும் அமெரிக்காவிலும் பலர் வேலையிழந்திருக்கிறார்கள். அதுவும் அமெரிக்காவில் கடந்த 26 வருடங்களில் மிகவும் அதிகமான வேலையிழப்பு வீதம் ஒக்ரோபரில் பதியப்பட்டிருப்பது, பொருளாதார மீள்வு பற்றிய சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. இதன் காரணமாகக் கொஞ்ச நாட்களாக வெகுவேகமாக ஏறிவந்த கனேடிய டொலரின் மதிப்பும் கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கிறது.
விளையாட்டு
அவுஸ்திரேலியா-இந்தியா ஒரு நாள் தொடர் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டு இருக்கிறது. 9 முக்கிய வீரர்கள் இல்லாமல் விளையாடும் அவுஸ்திரேலியா ஐந்து போட்டிகள் முடிந்த நிலையில் 3-2 என்று முன்னிலை வகிக்கிறது. டெல்லியில் நடந்த மூன்றாவது போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற, அடுத்த போட்டியில் 24 ஓட்டங்களால் போராடி வென்றது அவுஸ்திரேலியா. ஐந்தாவது போட்டியில் முதலில் ஆடி அருமையாக 350 ஓட்டங்களைக் குவித்த போதும், லீ, சிடில், பிராக்கன், ஜோன்சன் போன்ற முன்னணிப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கிய அவுஸ்திரேலியாவை 175 ஓட்டங்கள் அடித்துத் துவம்சம் செய்தார் சச்சின். இருந்தபோதும் கடைசிவரை நின்று அவர் வெற்றியைப் பெற்றுத்தரமுடியாமல் போக, அவுஸ்திரேலியா 3 ஓட்டங்களால் வென்றது. இந்த 175 இல் 7வது ஓட்டம், சச்சின் பெற்ற 17,000 வது ஓட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் 59 ஓட்டங்கள் பெற்றால் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் குவித்த முதல் வீரர் என்ற பெருமையும் இவர் வசமாகிவிடும். (சச்சின் விளையாடிய ஒரேயொரு சர்வதேச 20-20 போட்டியையும் சேர்த்தால் இன்னும் 49 ஓட்டங்களே தேவை).
இதே வேளை அடுத்த ஐ.பி.எல் போட்டிகளின் கொல்கத்தா நைற் ரைடேர்ஸ் அணிக்குத் தலைவராக சவ்ரவ் கங்கூலி திரும்பவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். டேவிட் வற்மோர் பயிற்றுவிப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல். லில் விளையாட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஐ.பி.எல்-1 ல் கடைசி இடம் பிடித்த டெக்கான் அணி ஐ.பி.எல்-2 ஐ வென்றது போல், ஐ.பி.எல்-2 ல் கடைசியாய் வந்த நைற் ரைடேர்ஸ் அடுத்த ஐ.பி.எல். லில் சாதிப்பார்களா?
சினிமா-பொழுதுபோக்கு
நடிகர் சூர்யா ஒரு சிங்கள இயக்குனரின் படத்தில் நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்திகள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன. ஆனால் இது தொடர்பாக சூர்யா ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட்டு, அப்படியான ஒரு படத்தில் தான் நடிக்கவில்லை என உறுதி செய்திருக்கிறார். சூர்யா அப்படி நடித்தால்கூட அது பற்றியெல்லாம் சண்டைபோடுவது முட்டாள்தனம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அப்படிப் பார்க்கப்போனால் சூர்யா முதலான எல்லா நடிகர்களும் தமிழைத் தவிர வேறு எந்த மொழிப் படத்திலும் நடிக்கவே கூடாது என்பதாகத்தான் போராடவேண்டும் என்பது என்னுடைய பார்வை. ஒருவர் தன் வாழ்வியல் ஆதாரமாக, சட்டத்துக்குட்பட்டு எதையும் செய்யலாம். அதைத் தடுப்பது அராஜகம். அதைவிடப் பரபரப்புக்காக இப்படியான பொய்ச் செய்திகளை விடுப்பது ஊடக விபசாரம். பாவம் சூர்யா, கொஞ்சக் காலமாகவே அவருக்கும் ஊடகங்களுக்கும் ஒத்துப்போவதேயில்லை.
ஒரு புரிதல்
இலங்கையில், அதுவும் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் 'தலித்துக்கள்' எங்கே இருக்கிறார்கள் என்பது எனக்கு இதுநாள்வரை புரிந்ததில்லை. ஆனால் சமீபத்தில் அதுபற்றிய ஒரு தெளிவு பிறந்திருக்கிறது. தலித்துக்கள் என்று சொல்லாவிட்டாலும், அவர்களை சாதிப் பெயர்களை நேரடியாகச் சொல்லி ஒதுக்கி வந்திருக்கிறார்கள் யாழ்ப்பாணத்தில். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த நாட்களை நினைத்துப் பார்க்கையில் தலித்துகள் மீதான வன்கொடுமைகள் ஆற்றியவர்களில் முதலிடத்தில் இருப்பவர்களில் யாழ்ப்பாணத்துச் சாதி வேளாளர்களும் முக்கியமானவர்கள் என்கிற மறுக்கமுடியாத உண்மை உறைக்கிறது. (தலித்துக்கள் பற்றிய தேடலைத் தூண்டியது சயந்தனின் இந்த வலி). இது பற்றி இன்னும் நிறைய எழுதவேண்டும்.
8 comments:
தங்களின் இடுகையை வாசித்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.
எழுதுவதற்கு நேரத்தைப் பயன்படுத்தி கொள்வதிலும், தங்களின் எழுத்து நடையும் பார்க்கும்பொழுது பிரம்பிக்க இருக்கிறது.
வாழ்த்துகள்
தங்களின் எழுத்துகளைப் படிக்கும், வாசிக்கும் ஒருவனாக
அன்புடன்
திகழ்
////சூர்யா அப்படி நடித்தால்கூட அது பற்றியெல்லாம் சண்டைபோடுவது முட்டாள்தனம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ////
சரியாகச் சொன்னீர்கள் கீத்….
இலங்கையில், அதிலும் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் தலித்துக்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள் குறித்து பெரிதாக யாரும் எழுதவோ பேசவோ முன்வருவதில்லை என்பது உண்மை. அதற்கு தலித்தியம் குறித்து பேசுகிறவர்களோ, எழுதுகிறவர்களோ தலித்துக்களாக கணிக்கப்பட்டு விடுவார்கள் என்கிற மனப்பயமும் (இந்த காரணத்தை நண்பரொருவரே குறிப்பிட்டார்) காரணம். இது தவிர்க்கப்பட வேண்டும்.
தலித்துக்கள் குறித்து முக்கியமாக ஆராயப்பட வேண்டிய வினா இது என்று நினைக்கிறேன்.
இந்தியாவில் தலித்துக்கள் என்று அடையாளப்படுத்தப்படுகின்ற பிரிவினர் அனைவரும், இலங்கையில் தலித்துக்களாக அடையாளப்படுத்த முடியாது. சில சமூகத்தினர் யாழ்ப்பாணத்தில் தலித் என்ற அடையாளங்களுக்குள்ளேயே வரமாட்டார்கள். அதற்கு யாழ்ப்பாணத்தில் வாழ்வியலை எடுத்துக் கொள்ளுங்கள் சில விளக்கங்கள் கிடைக்கலாம்.
இது குறித்து என்னுடைய பதிவு இங்கே…..
http://maruthamuraan.blogspot.com/2009/08/blog-post_15.html
ம்ம்ம் யாழ்ப்பாணத்தில் சாதிய வெறி இருந்தது என்பதற்கு பல உதாரணங்கள். எங்கள் ஊரில் அவர்கள் தண்ணீர் அள்ளுகிறார்கள் என்று அதற்குள் ‘கழிவோயில்’ ஊற்றிய புண்ணியவான்கள் இருக்கிறார்கள். இது தொடர்பாக அருண்மொழிவர்மனின் பதிவு இது. ஆனால் அந்த யாழ். நூலகத்திறப்பு விடயத்தில் அவருடன் முரன்படுகிறேன்.
http://solvathellamunmai.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF
நன்றி திகழ்... ஆனாலும் ‘தங்கள்' 'தங்களின்' வேண்டாமே. இடைவெளி அதிகமாக இருப்பதாக உணர்கிறேன்
///அதற்கு தலித்தியம் குறித்து பேசுகிறவர்களோ, எழுதுகிறவர்களோ தலித்துக்களாக கணிக்கப்பட்டு விடுவார்கள் என்கிற மனப்பயமும் (இந்த காரணத்தை நண்பரொருவரே குறிப்பிட்டார்) காரணம். இது தவிர்க்கப்பட வேண்டும்.///
வலிக்கிற உண்மை மருதமூரான். ‘பேந்து எங்களையும் அவங்கள் எண்டு சொல்லுவினம்' எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
///சில சமூகத்தினர் யாழ்ப்பாணத்தில் தலித் என்ற அடையாளங்களுக்குள்ளேயே வரமாட்டார்கள்///
அது தெரிகிறது மருதமூரான்... உங்கள் பதிவுக்குக் கட்டாயம் வருகிறேன்
///ம்ம்ம் யாழ்ப்பாணத்தில் சாதிய வெறி இருந்தது என்பதற்கு பல உதாரணங்கள். எங்கள் ஊரில் அவர்கள் தண்ணீர் அள்ளுகிறார்கள் என்று அதற்குள் ‘கழிவோயில்’ ஊற்றிய புண்ணியவான்கள் இருக்கிறார்கள்///
இதெல்லாத்தையும் தாண்டி யாழ்ப்பாணம் ஏதோ ஒரு உயர்வான இடமாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது இல்லையா கதியால்?
///ஆனால் அந்த யாழ். நூலகத்திறப்பு விடயத்தில் அவருடன் முரன்படுகிறேன்///
இந்த அழகான முரண்பாடுதான் எனக்குக் கதியாலிடம் பிடித்தது :))
அருண்மொழியாரை ஏலவே வாசித்திருக்கிறேன் :)
‘பேந்து எங்களையும் அவங்கள் எண்டு சொல்லுவினம்' எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.//
இப்படிச் சொல்வதும் சாதிய மனோபாவம் தானே.. ? இல்லையா..
பஞ்சமர் அல்லாதோர் தாம் பஞ்சமர்களுக்கு பரிவாக கதைக்கப்போய்.. பிறகு தம்மையும் பஞ்சமர்களாக்கி விடுவார்கள் என்று அஞ்சுவதின் உளவியல் என்ன..? பஞ்சமராய் இருக்க முடியாது என்பதுதானே...
ஓம்.. என்னைப் பஞ்சமராக்கினால்த்தான் என்ன.. ? என்ற எண்ணம் ஏன் ஏற்படவில்லை..
நிறைய கேள்விகள் இல்லையா கிருத்திகன்..?
///பஞ்சமர் அல்லாதோர் தாம் பஞ்சமர்களுக்கு பரிவாக கதைக்கப்போய்.. பிறகு தம்மையும் பஞ்சமர்களாக்கி விடுவார்கள் என்று அஞ்சுவதின் உளவியல் என்ன..? பஞ்சமராய் இருக்க முடியாது என்பதுதானே...///
நிச்சயமாக அனானி... அதுதான் காரணம். யார் என்ன சொன்னால் என்ன நான் என் மனதுக்குச் சரி என்று சொல்வதைச் செய்வேன் என்கிற மனோபாவம் வந்தாலே போதும். அதற்காக பஞ்சமர்களுக்கெல்லாம் நான்தான் காவலன் என்றுசொல்லிக்கொண்டு சாதி வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களையும் இனங்கண்டுகொள்ளவேண்டும்
///‘பேந்து எங்களையும் அவங்கள் எண்டு சொல்லுவினம்' எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.//
இப்படிச் சொல்வதும் சாதிய மனோபாவம் தானே.. ? இல்லையா..
///
அதையும் நான் விளக்கமாகச் சொல்லியிருக்க வேண்டும். நிச்சயமாக இந்த மனோபாவமும் சாதீயத்தால் கட்டியமைக்கப்பட்டதேயாகும்.
Post a Comment