Saturday, 15 October 2011

எனக்குச் சிவப்பு நிறம் பிடித்திருக்கிறது

உந்தையும் எந்தையும் ஒரு வயிற்றுச் சோதரர்
உன் தாயும் என் தாயும் தோழியர்
நீயும் நானும் விளையாடித்திரிந்த செம்பாட்டுப் புழுதி
என்றைக்கும் புட்டத்தில் ஒட்டியிருக்கிறது
ஐந்து ரூபாய் ‘ஐஸ் பழம்’ ஒன்று இருவர் நாவிலுங்கரைந்திருக்கிறது
முழங்கால் தழும்பினுள்ளே உன் எச்சில் ஒளிந்திருக்கிறது
உனக்குச் சின்னதாய்ப்போன கால்சட்டை ‘சிப்’
தந்த வடு என் சர்க்கரையில் உறுத்திக்கொண்டே இருக்கிறது

தள்ளுவண்டியில் என்னைத் தள்ளிக்கொண்டும்
எனக்குப் போட்டியாக வீரிட்டு அழுதுகொண்டும்
எனக்கு முதலே உனக்கு வந்துவிட்ட பல்லைக் காட்டிக்கொண்டும்
என் கையிலிருந்த பொம்மையைப் பிடுங்கியபடியும்
உன்வீட்டு பொம்மையை எனக்குத் தந்தபடியும்
என் தாயின் மார்பில் முகம் புதைத்துக்கொண்டும்
என்னை முத்தமிட்டுக்கொண்டும்
ஒரு யோகியின் முனைப்புடன் ’படலத்துக்கு’ ‘டிசைன்’ வெட்டிக்கொண்டும்
வெள்ளைச் சட்டையில் பள்ளிக்கூடத்துக்கு வழிநடத்திக்கொண்டும்
சைக்கிள் ‘கரியலில்’ என்னைச் சுமந்துகொண்டும்
என் சைக்கிள் பாரில் இருந்து டபிள்ஸ் போட்டுக்கொண்டும்
உன் பதின்மத்து துணையருகில் வெட்கச் சிரிப்போடும்

என் ஞாபக அடுக்குகளில்

அம்மையாய்
அப்பனாய்
பிள்ளையாய்
சகோதரமாய்
தோழமையாய்
இனிய எதிரியாய்
காதலாய்
குருவாய்
எல்லாமுமாய்
நீ இருக்கிறாய்.

ஆனால் நாயே... உன்னை நான் கொல்லவேண்டும்

ஏனென்றால்,

உனக்கு இளஞ்சிவப்பு நிறம் பிடித்திருக்கிறது

No comments: