Friday 30 July 2010

பொழுது போகாதவன் புலம்புகிறான்: 3

அனேகமாக வலையாட வருகிற தொடக்கத்தில் எல்லோருக்கும் பெரியார், சே மீதான ஈர்ப்பும் தானாகவே வந்து ஒட்டிக்கொள்வது இயல்பு. அதற்கு நானும் விதிவிலக்கல்ல. பெரியாரின் பல கருத்துகளில் இன்னும் ஈர்ப்பிருக்கிறது. ஆனால் அவரை முன்வைத்து அரசியல் செய்பவர்கள் பலரது கருத்துக்களைப் பார்க்கிறபோது பெரியார் மீதான ‘அப்பழுக்கற்ற புரட்சிக்காரர்’ விம்பம் சிதைவதையும் குறிப்பிட்டாகவேண்டும். பெண்ணடிமைத்தனத்தை உடைத்தல், மூட நம்பிக்கைகளை இல்லாதொழித்தல், சாதீயக் கட்டுமானங்களை தகர்த்தல் முதற்கொண்டு பல நல்ல கொள்கைகளோடு செயற்பட்ட, தனித் துதிபாடலை எதிர்த்ததாகச் சொல்லப்பட்ட பெரியாரின் பெயர், நேர்மாறு சாதீயத்துக்கும் மாற்றுக் குறையாத தனிமனிதத் துதிபாடலுக்கும் பயன்பட்டுக்கொண்டிருப்பது வருந்தத்தக்கது. பார்ப்பனர்கள் என்று பெரியார் மற்றும் பெரியாரியத்தைத் தொடர்பவர்கள், முற்போக்குவாதிகள் விளிப்பது யாரை என்று இப்போது யாராலேயும் சரியாக அடையாளங்கண்டுகொள்ள முடியவில்லை என்பது வருந்தத்தக்கது. பல ‘பெரியாரிஸ்டுகள்’ நிச்சயமாக ‘பிராமணர்’ என்கிற ஒரு சமூகத்தை மட்டுமே குறிவைத்துத் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து ஏனைய ஆதிக்க சாதி ஒடுக்குமுறையாளர்கள் பற்றிய சத்தங்கள் வருவதில்லை. பார்ப்பன எதிர்ப்பு என்றதும் ‘பூநூல்’ வந்து குந்திக்கொள்கிறது. பார்ப்பனியம் என்றால் என்ன என்று பாரி அரசு என்பவர் எழுதிய ஒரு சின்னப் பதிவை வினவு தளம் மேற்கோள்காட்டி இருந்தது.

“உணவு, உடை, உறைவிடம், பிறப்பு, இறப்பு, பண்பு, குணம், தொழில், பொருளாதாரம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, பண்பாடு, கல்வி, அறிவு, சிந்தனை, பாராம்பரியம், பரம்பரை, குலம், இனம், மொழி, மதம், நிறம்... இன்னபிற இப்படி எந்தவொரு காரணிக்கொண்டும் ஒரு மனிதனை உயர்ந்தவன் என்றும் இன்னொருவனை தாழ்ந்தவன்(இழிந்தவன்) என்றும் சித்தரிப்பது, பேசுவது, எழுதுவது, நடைமுறையில் கடைபிடிப்பது, பிரச்சாரம் செய்வது, கலையின் ஊடாக பதிவு செய்வது, இன்னபிற செயல்களின் வழியாக சமூகத்தில் ஏற்ற, தாழ்வுகளை உண்டு பண்ணுவதும் அதன் மூலம் சமூக உளவியலை சிதைத்து மனிதர்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர்(இழிந்தோர்) என்கிற பாகுபாட்டை உண்டாக்குவதுமான செயலே பார்ப்பானியம்!
எ.கா: 1. சைவ உணவை உண்ணுபவர்கள் உயர்ந்த மனிதர்கள், அசைவ உணவை உண்ணுபவர்கள் தாழ்ந்தவர்கள்(இழிந்தவர்கள்) என்று கூறுவது.
2. கற்பூரத்தை கொளுத்தி, தீயில் நெய்யை ஊற்றி வழிபாடு செய்கிற செயலை உயர்ந்ததென்றும், அதை செய்பவரை உயர்ந்தோர் என்பதும்... கோயிலுக்கு ஆடு,கோழி வெட்டி வழிபாடு செய்வதை இழிந்த செயலாகவும் அதை செய்வோரை தாழ்ந்தவர் (இழிந்தவர்) என்பதுமான செயல்.
3. ஒரு மொழியை(சமஸ்கிருதம்)யும், அதிலுள்ள சில நூல்களை கற்றோரை மட்டுமே கடவுளுக்கு நெருக்கமான உயர்ந்தோராக கொள்வதும், இன்னொரு மொழி (தமிழ்) பேசுவோரை தாழ்ந்தவராகவும் கொள்வதுமான செயல். (நா.கண்ணன் என்கிற பதிவர் வடமொழியை இறைதன்மையுள்ள மொழி என்கிறார்... இறைதன்மையுள்ள மொழி ஏன் இறந்துபோனது?)
குறிப்பு : இங்கே குறிப்பிட்ட செயல்கள் மட்டுமல்ல... எதுவொன்று ஒருவனை உயர்ந்தவனாகவும், இன்னொருவனை தாழ்ந்தவனாகவும் சித்தரிக்கிறதோ அதெல்லாம் பார்ப்பானியமே! அதை செய்வோர் பார்ப்பானியவாதிகளே!”

ஆனால், பார்ப்பனிய எதிர்ப்புப் பேசும் அத்தனை பேருமே பிராமணர்களை மட்டுமே குறிவைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது கண்கூடு. இல்லையென்றால் எங்கெல்லாம் இது பற்றிய பேச்சு எழுகிறதோ அங்கெல்லாம் பூநூலும், ‘பெயர்களும்’ வந்து குந்திக்கொள்ளாது. இத்தனைக்கும் மேற்படி விளக்கத்தை மேற்கோள்காட்டிய வினவுகூட எப்போதும் பார்ப்பனியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதி என்கிற புரிதல் வரும்வண்ணமே கட்டுரைகளை எழுதிவருவது குறிப்பிடத்தக்கது. அப்படிப் பார்க்கப்போனால் நான் பிறந்து வளர்ந்த  ஊர் பார்ப்பன ஆதிக்கம் இல்லாத ஊர் என்றுதான் நான் சண்டை போடவேண்டும். ஏனெனில் பிராமணர்களுக்கு வெள்ளாளர்கள் அளவுக்கு செல்வாக்கு இருந்ததில்லை. காரணம் வெள்ளாளர்களில் அனேகம்பேர் நிலப்பிரபுக்களாக இருந்தார்கள். ஆனால் வெள்ளாளர்கள் மட்டும்தான் பார்ப்பனர்களாக இருந்தார்கள் என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. செல்வம் அருளானந்தம் தேவகாந்தனுடனான ஒரு பேட்டியில் பின்வருமாறு குறிப்பிடுவார்


மேற்படி செல்வம் வாழ்ந்த ஊரில், பாரி அரசு சொன்ன வரைவிலக்கணப்படி, ஒதுக்கப்பட்ட பறையர்களின் பார்வையில், வெள்ளாளர்கள், கரையார்கள் மற்றும் பள்ளர்கள் யாவருமே ‘பார்ப்பனர்கள்’ என்கிற வகைக்குள் வரவேண்டியவர்கள் என்பது என் கருத்து.

ஆனால், இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சாதி மறுப்பு, தலித் உரிமைகளைப் பேசிவருகிற சிலர்கூட பார்ப்பனர் என்றால் பிராமணர்கள் என்கிற ரீதியில்தான் பேசி வருகிறார்கள். வடலி வெளியீடான ‘கொலை நிலம்: தியாகு-ஷோபாசக்தி முரண் அரசியல் உரையாடல்கள்’ என்கிற புத்தகத்தில் சோபாசக்தி குறிப்பிட்டதாக கீழ்வருகிற வசனம் வருகிறது. ’

‘அய்ரோப்பாவில் புலிகள் இந்துக் கோயில்களை நடத்துவதும் அங்கே பார்ப்பனர்கள் தேவ பாசையில் மந்திரம் சொல்லிக் கொழுப்பதும் சோசலிசத்தை நோக்கியதா அல்லது சாதியத்தை நோக்கியதா?’ (பக்கம் 65, பந்தி 1, வரிகள் 8,9,10,11).

இங்கே ஷோபாசக்தியால் பார்ப்பனர் என்கிற சொல்லாடல் பிராமணரைக் குறித்தே பயன்பட்டிருக்கிறது. இலங்கையில் பிறந்த சாதாரணமான தமிழ்க் குடிமகன் ஒருவரிடம் ஒரு பிராமணனைக் காட்டி ‘உவன் ஒரு பார்ப்பான். உவனால்தான் எல்லாப் பிரச்சினையும். உவனை அடி’ என்று சொன்னால், நிச்சயம் அவ்வாறு சொல்பவர் விநோதமானவராகப் பார்க்கப்படுவார். காரணம், ஈழத்தில் பிராமணர்களாலான அடக்குமுறை மிக மிகக் குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம். ஆனால் அதேயளவுக்கு வெள்ளாள அடக்குமுறை இருந்துவந்திருக்கிறது. என்னுடைய கேள்வி, பாரி. அரசு சொல்கிற வரையறைக்குட்பட்டுப் பார்ப்பனியத்தைப் பார்த்தால் யாழ்ப்பாணத்து வெள்ளாளனும், பசும்பொன் தேவனும் ‘பார்ப்பனர்’ என்கிற வகைக்குள் அடக்கப்பட்டே அவர்கள் மீதான விமர்சனங்கள் வரவேண்டும். எனக்குத் தேவர்களைப் பற்றித் தெரியாது. ஆனால் வெள்ளாளரைத் தெரியும். அவர்கள் பூநூல் போடுவது சாவு வீட்டுச் சடங்கு, அந்தியோட்டி சபண்டீகரக் கிரியைகள் மற்றும் திவசங்களின்போது. அதுவும் பிராமணர்கள் கொடுக்கும் பூநூல் போட்டுத்தான் சடங்குகள் செய்வார்கள். பிராமணர் பூநூல் போடுவதுக்கும் சடங்குகளில் பூநூல் போடுவதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. வெள்ளாளர்களுக்கு ‘தேவ பாசை’ தெரியாது, மாமிசம் நன்றாகவே புசிப்பார்கள். பொதுவெளியில் வைக்கப்படுகிற பார்ப்பன விம்பத்துக்கும் இவர்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை. ஆகவே ஈழத்துச் சாதியம் பற்றிப் பேசுகிறவர்கள் ‘பார்ப்பனர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசித்தாகவேண்டும். பார்ப்பனர்கள் என்றதும் ‘பூநூல், தேவபாசை’ இரண்டும் மனதுக்கு வரும்படியாக ஒரு விம்பத்தைப் பொதுப்புத்தியில் சமைத்திருக்கிறார்கள் இன்றைய சாதி மறுப்பாளர்கள். ஆக, ஈழத்துச் சாதியம் பற்றிப் பேசும்போது பார்ப்பனர்கள் என்று பொதுப்படையாகப் பேசுவதில் சிக்கல்கள் இரண்டு:
  1. பெரும்பாலும் கோயிலை ஒட்டியிருக்கிற வீடுகளில், கோயிலுக்கு அர்ச்சனைக்காக வருகிற பொருட்கள், திவசக் காணிக்கைகள், குரு தட்சிணை என்று மிகவும் கஷ்ட ஜீவனம் நடத்துகிற ஈழத்துப் பிராமணர்கள் மீது தவறான விம்பம் கட்டமைக்கப்பட்டுவிடும். (பணக்காரக் கோவில் அர்ச்சகர்களை இதற்குள் உள்ளடக்க வேண்டாம்)
  2. வெள்ளாளர்களின் சாதீய அடக்குமுறை பற்றிய உண்மைகள் உறங்கிவிடும்
ஆகவே ‘பார்ப்பான்’ என்கிற சொல்லாடலைக் கேள்விக்குள்ளாக்கி அதற்குரிய சரியான வரையறையைச் சமைக்கவேண்டிய கட்டாயம் சாதி மறுப்பாளர்களுக்கு இருக்கிறது. பார்ப்பான் என்றால் பிராமணன் என்று தொடர்ந்து பொதுப்புத்தியில் பதிந்து போய்விடுவதால், பிராமணர்கள் மீதான வன்மம் வளர்ப்பதும் ஒரு வகையில் சாதீயம் என்று சொன்னால், நான் பிராமணர்களுக்கு வக்காலத்து வாங்குவதாய் சொல்லுவார்கள் இன்றைய சாதி மறுப்பாளர்கள். ஆனால் அவர்களே அறியாமல், பிராமணர்கள் மீது பழியைப் போட்டு மற்ற ஆதிக்க சாதிகளின் அடக்குமுறைகளை மறைக்கிற வரலாற்றுத் தவறை அவர்கள் செய்துகொண்டிருப்பது கண்டனத்துக்குரியது. செல்வம் அருளானந்தம் வாழ்ந்த கத்தோலிக்கக் கிராமத்தில் எந்தப் பிராமணனும் செல்வாக்கோடு இருந்திருக்கவில்லை.
*----*----*----*

இதே விடயம் சம்பந்தமாகப் பெரியாரது தீவிர சாதி மறுப்பாளராக நான் பார்த்த விம்பத்தை தன்னையறியாமல் தமிழ் ஓவியா உடைத்தபோது வலித்தது. அவர் எழுதிய ‘நமக்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன வேறுபாடு ?’ என்கிற பதிவில் கீழ்க்கண்ட வசனம் பெரியார் சொன்னதாக மேற்கோள் காட்டப்படுகிறது:


பெரியார் என்ன சொல்ல வருகிறார் என்பதை விளங்கிக்கொள்ள முடிந்தாலும், “கீழ்மகனாக இருந்தாலும்”, “மானமற்ற ஈனத்தொழில் புரிகிறவனாக இருந்தாலும்” என்கிற வார்த்தைகளைப் பெரியார் சொன்னார் என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. தொழில் ரீதியாக மக்களைப் பிரித்து வைத்து வருணாசிரமம் சொன்னதென்று சொல்லிச் செய்யப்படுகிற அநியாயங்களைத் தட்டிக்கேட்கிறேன் என்று சொல்லிப் போராடிய ஒருவரின் வாயிலிருந்து ‘கீழ்மகன்’ ‘மானம்கெட்ட ஈனத்தொழில்’ என்கிற வார்த்தைகள் எல்லாம் எப்படி வந்தன? எப்படி ஒரு தொழிலை ‘ஈனத் தொழில்’ என்று சொல்லலாம். ஈனத் தொழில் என்று சொல்லப்படுகிற விபசாரத்தைக்கூட (விபசாரிகளிடம் போகிற கனவான்களை விடுங்கள். அவர்கள் ஈனர்கள் அல்லர்) தொழிலாகப் பார்த்து வரவு செலவுக் கணக்கெல்லாம் கேட்டவர் என்றுதானே பெரியாரைப் பற்றிச் சொல்லித் தந்தீர்கள் பெரியாரியர்களே???

தமிழ் ஓவியா ஒரு தீவிர தனிமனிதத் துதிபாடி என்பது பலருக்குத் தெரிந்ததே. கி.வீரமணியைத் தமிழினத் தலைவராகச் சித்தரித்துப் பரப்புரையாற்றும் ஒரு தொண்டர் என்பதும் தெரியும். ஒருவேளை ‘தன் தன்னிகரில்லாத் தலைவன் வீரமணியை’ உயர்த்தவென்றே பெரியார் சொல்லாத வார்த்தைகளையும் சேர்த்துச் சொல்கிறாரோ என்று அடிமனம் சமாதானப்பட முயன்றது. ஆனால் “30.08.1953 இல் ஆம்பூர் முகமதலி மைதானத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: “விடுதலை” 08.09.1953” என்று வலுவான ஆதாரத்தையும் காட்டி அந்த எண்ணத்திலும் மண்போடுகிறார் தமிழ் ஓவியா . அப்படியானால் பெரியார் போராடியது தன் சாதியை விட உயர் சாதியென சமூகத்தில் நிலை நிறுத்தப்பட்ட ‘பிராமணர்களுக்கு’ எதிராக மட்டுமா? ஒட்டுமொத்த சாதீயக் கட்டமைப்புகளுக்கு எதிராக இல்லையா? ‘கீழ்மகன்’ ‘மானம்கெட்ட ஈனத்தொழில்’ போன்ற வார்த்தைகள் பார்ப்பனியம் பற்றிய முழுப்பிரக்ஞை உள்ள ஒருவரிடமிருந்து எப்படி வந்திருக்க முடியும்? இது ஒருவகையில் நேர்மாறு சாதீயம் இல்லையா? போன்ற சந்தேகங்கள் வந்து விழத்தானே செய்கிறது. நல்லவேளை, பசும்பொன் முத்துராமலிங்கம் உட்பட பலரையும் கண்டித்திருக்கிறார். அதனால் முழுவதுமாகப் பெரியாரை மறுதலிக்காமல் இருக்கமுடிகிறது.

வருணாசிரம விதிமுறைகள் சித்தரித்த ‘ஈனத் தொழில்களை’க் கேள்விக்குள்ளாக்கிய பெரியார் எப்படி அந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்? பெரியார் காலத்தில் பார்ப்பன ஆதிக்கம் அல்லது பிராமண ஆதிக்கம் பயங்கரமாக இருந்தது அதனால் அவர்களைப் பெரியார் திட்டியதில் தவறேயில்லை என்று சொல்லிச் சப்பைக்கட்டெல்லாம் கட்டவேண்டாம். என்னுடைய கேள்வி பெரியார் யாரைத் திட்டினார் என்பதல்ல. ‘மானம் கெட்ட ஈனத் தொழில்’ என்று எதைச் சொல்கிறார்? உடனே சொல்வீர்கள் ‘பார்ப்பனர் அல்லது பிராமணர்’ செய்கிற தொழில்களைத்தான் பெரியார் ஈனத்தொழில் என்றார் என்று. ‘பார்ப்பான் முதலில் எங்கள் தொழில்களை ஈனத் தொழில் என்றான், அதனால் அவனது தொழில்களை ஈனத் தொழில் என்றோம். பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தம், கண்ணுக்குக் கண்’ என்ற வீரவசனம் எல்லாம் வேண்டாம். மேற்படி வார்த்தைகளைப் பெரியாரே சொல்லியிருந்தாலும், அவர் மீது என்ன அபிமானம் இருந்தாலும், அந்த வார்த்தைகள் தவறென்ற பிரக்ஞை இல்லாமல் அந்த வார்த்தைகளைக் கொண்டாடுவதை என்னென்று சொல்லலாம்? நேர்மாறு சாதீயம் என்பதைத் தவிர!

*----*----*----*
பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்ப்பானை அடி- அன்றைக்குப் பெரியார் சொன்னது. இன்றைய பெரியாரியர்களைக் பார்த்தால் இன்னொன்றையும் சேர்த்திருப்பார் பெரியார்; பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்ப்பானை அடி, பார்ப்பானையும் பெரியாரியனையும் கண்டால் பெரியாரியன் நின்ற இடத்தில் புல்பூண்டு முளைக்காமல் ஏதாவது குண்டு போடு என்று.

4 comments:

தர்ஷன் said...

நல்ல பதிவு கீத்
பார்ப்பனியம் என்பது ப்ராம்மனர்களினது உயர் சாதி மனோபாவம் என்றல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் மீது அடக்குமுறையைப் பிரயோகிக்கும் சகல சாதியினரினதும் சாதித்திமிர் என அடையாளப்படுத்த வேண்டும் எனும் தங்கள் ஆதங்கம் புரிகிறது.
ஆனால் பதிவுலகில் அத்தெளிவு இருக்கின்றது என்றே நினைக்கிறேன். சீமான்,விவேக் வகையறாக்களின் சாதிப்பற்றும் தம் அடிமைத்தனத்தைக் கூட சிலாகிக்கும் முஸ்லிம் பார்ப்பனியமும் அவ்வப்போது வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது. வால்பையனின் பதிவுகளைப் பாருங்கள். சாதியம், மதம் என்பவற்றுக்கு மட்டுமல்லாமல் தனி மனித துதி பாடுதலுக்கு எதிராகவும் கருத்துக்களை கூறியிருப்பார்.
தமிழ் ஒவியாவைப் பொறுத்தவரை தம் தலைவர் வீரமணியை மட்டுமல்ல கலைஞரையும் துதிபாட தயங்காதவர். என்ன பெரியாரை முதலில் வாசிப்பவர்களுக்கு திறந்த மனதோடு அதை அணுகத் தடையாக அமைந்து சில முன்முடிவுகளை ஏற்படுத்தி விடக் கூடியது அவரது பதிவு.
இலங்கையில் நிலைமை மோசம் கீத். இங்கு தமிழகத்தைப் போல சாதி அடையாளத்தைப் பேணுதல் என்பதை ஒரு தவறாகப் பார்க்கும் காலம் இன்னும் வரவில்லை. என்று திருமண விளம்பரங்களில் இந்து, உயர்குடி, வெள்ளாளர் என்ற வார்த்தைகள் மறைகின்றதோ அன்றுப் பார்க்கலாம்.

ALHABSHIEST said...

திருட்டு ,களவு போன்றவற்றை ஈனதொழிலாகவும்,அதனை செய்வோரை கீழ்மக்கள் என்ற அர்த்தத்தில் கூட சொல்ல பட்டிருக்கலாம் அல்லவா?.

Mohan said...

Keith,

It is like: "Communism is bad or Communists are bad." and "Love failed or Lovers failed." I agree with your views on current Politicians and DK (all forms of DK such as VeeraMani, Kollathur Mani etc.) but not with your words on Periyar. He is a human, he might made some mistakes or as Siva mentioned in his comment he might meant something. He is like western philosophers Voltaire and Rousseau. Of course, how the French and American revolutions are slowly becoming meaningless in front of corporate greed and corruption, Periyar's Dravidian movement lost its direction and became a joke. I don't think Periyar is a failure? I leave the judgement of who failed to others.

Mohan

வடலியூரான் said...

கீத் அதி அற்புதமானதொரு தோலுரிப்பு.என் மனதிலும் ஏன் இங்கத்தைய அப்பாவி பிராமணர்களைத் தாக்கிப் பேசுகிறார்கள் என்ற வருத்தம் இருந்து கொண்டேயிருந்தது.அதோடு இதுவரை பார்ப்பனியம் என்றால் பிராமணர் என்று தான் கருதியிருந்த என் குருட்டறிவைத் தெளிவாக்கிய்மைக்கு நன்றி.தொடர்ந்தும் தோலுரிப்புக்கள் வரட்டும்.உம்மால் தான் இவை முடியும்.எம் போன்றவர்களால் இவ்வளவு ஆணித்தரமாக கூறமுடியாது