Saturday, 14 November 2009

மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் (??!!)

பல இடங்களில் பார்த்துச் சலித்துப்போன ஒரு விஷயமாக இது இருக்கிறது. ஒரு இணையத்தளக் கட்டுரையில் எழுதியிருக்கிறார்கள், நவம்பர் மாதம் ஈழத் தமிழர்களுக்குக் கொண்டாட்டமான வாரமாம். ஏனென்றால் இந்த மாதத்தில்தான் மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் வருகிறதாம். வானொலிகளும் இதே தொனியில்தான் அலறிக்கொண்டிருக்கின்றன. இது ஏதோ ஒரு கோவில் திருவிழா, நவராத்திரி, கந்தசஷ்டி வகையறாக் கொண்டாட்டம் என்பதாக ஒரு கட்டமைப்பு எம்மத்தியில் பலகாலமாக இருந்துவருவது வருந்தத்தக்கது. இணையத்தில்கூட இரண்டொரு குரல்கள் மட்டுமே இந்தக் ‘கொண்டாட்டம்' என்ற சொற்பிரயோகம் பற்றிய எதிர்ப்புக்களை எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. உண்மையிலேயே மாவீரர் மயானம் ஒன்றுக்கு ஒரு மாவீரர் நினைவு நாளில் போய்வந்திருக்கும் யாரும், இதை ஒரு ‘கொண்டாட்டம்' என்று வாய்தவறிக்கூடச் சொல்லிவிடமாட்டார்கள்.

உண்மையைச் சொல்லப்போனால் நானும் 2003 நவம்பர் 27 வரைக்கும் இந்த உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வை ஒரு கொண்டாட்டமாகத்தான் பார்த்து வந்திருக்கிறேன். அந்த நாட்களில் பல இடங்களில் பந்தல்கள் போட்டு இறந்தவர் படம் எல்லாம் வைத்து மாலை போட்டிருப்பார்கள். சாந்தனும், தேனிசைச் செல்லப்பாவும் ஒலிபெருக்கிகளில் முழங்கிக்கொண்டிருப்பர். நவம்பர் 27 அன்று தலைவரின் உரைக்கான எதிர்பார்ப்பு பயங்கரமாக சாதாரண மக்கள் மத்தியில் எகிறிக்கிடக்கும். 2003 நவம்பர் 27 வரைக்கும் அந்த உரையை அடுத்த நாள் உதயன் பத்திரிகையில் படிக்கும் பழக்கம் மட்டுமே இருந்தது. இந்த நவம்பர் 27 ஐ அண்டி ஒலிக்கும் ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' என்ற பாடலை இசைக்ககவே நானும் ரசித்து வந்திருக்கிறேன்.

2003 மாவீரர் வாரத்தில் ஒரு நாள் நித்து வீட்டின் முன்னால் கூடிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது பேச்சோடு பேச்சாக 'இந்த முறை மாவீரர் நாளுக்கு எள்ளங்குளம் சுடலைக்குப் போறதுதான்டா' என்று முடிவாயிற்று. போகும்போது 'எள்ளங்குளம் சுடலை'யாக இருந்தது வரும்போது ‘எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லமாக' மாறியிருந்தது.

அந்த நாளை வீடியோ பிடிக்கவெனக் குழுக்கள் அலைந்து திரிந்த வண்ணம் இருந்தன. பெருந்திரளாய்ச் சனம் வந்திருந்தது. பலர் முகத்தில் நிரந்தரமாக அப்பப்பட்ட சோகம். நாங்களோ வெடிவால்கள். எங்கே என்ன பேசுவது என்றில்லாமல் எல்லாவற்றையும் நக்கலாகப் பார்த்த காலம் அது. அப்படி ஒரு வேடிக்கை பார்க்கிற மனோநிலையில்தான் நாங்கள் எள்ளங்குளம் போனோம். ஒளியேற்றப்பட்டு அழகாக இருந்த அந்தத் துயிலும் இல்லத்திலிருந்த ஒரு கனதியான சோகம் மெல்ல மெல்ல எங்களைக் கவ்வத்தொடங்கியது சண்முகசுந்தரம் சேரைப் பார்த்தபோதுதான். எனக்கு நிச்சயமாக நினைவிருக்கிறது. சண்முகசுந்தரம் சேரின் கண்கள் கலங்கியிருந்தன. தலை துவண்டிருந்தது. அவரது மகனின் சமாதிக்கு முன்னால் நிற்கிறார் 72 வயதில் கால்சட்டை போட்டபடி உயரமான வேப்பமரங்களில் ஏறி ஆட்டுக்குக் குழை வெட்டிப்போடக்கூடிய அந்தக் கம்பீரமான மனிதர். அன்றைக்குத்தான் நான் சண்முகசுந்தரம் சேரை ஒரு வயோதிகராகப் பார்த்தேன்.

அந்த நேரம் பார்த்து 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' பாடல் ஒலித்தது. சத்தியமாக இசையை ரசிக்க முடியவில்லை. மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்க ஒரு இனம்புரியாத உணர்வு நாடி நரம்பெங்கும் ஓடிப் பரவும். தாய்மார்கள், சகோதரிகள், மனைவிகள், காதலிகள் என்று பலர் புலம்புவார்கள். ‘ஆம்பிளை அழக்கூடாது' என்ற கட்டமைப்பு உடைந்து தந்தைகளதும், சகோதரன்களதும் கண்கள் குளமாகியிருக்கும். பார்த்துக்கொண்டிருக்கிற எம் கண்களும்தான். இந்த நேரம் பார்த்துத் தலைவரின் உரை ஆரம்பமானது. கொஞ்ச நேரம் கேட்டுக்கொண்டிருந்தபோது மகி சொன்னான் ‘மச்சான் டே, இன்னும் கொஞ்ச நேரம் நிண்டா நான் இயக்கத்துக்குப் போடுவன். வா வெளிக்கிடுவம்' என்று. மறுபேச்சில்லாமல் வெளியே வந்துவிட்டோம். வழமையாக ஏதாவது பேசி நக்கல் செய்து திரிகிற எங்களால் அன்றைக்கு மௌனம் தவிர வேறெதையும் தரமுடியவில்லை. அதன் பின் கொஞ்சநாட்கள் 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' பாடலின் பின்னணியில் கலங்கிய கண்களோடு சண்முகசுந்தரம் சேர் வந்துபோவார், தூக்கமற்ற இரவுகளில். இப்படிப்பட்ட உணர்வுபூர்வமான ஒரு ‘துக்க அனுஷ்டிப்பை' மிக இலகுவாக ‘மாவீரர் தினக் கொண்டாட்டங்கள்' என்று கொச்சைப்படுத்துவது எப்படிப்பட்ட ஈனச்செயல் தெரியுமா.

உண்மையைச் சொல்லப்போனால் ஈழவிடுதலைப் போராட்டம் பற்றிய காட்டமான விமர்சனங்கள் சில எனக்கிருப்பினும், சுகமான வாழ்க்கையைத் துறந்து, துப்பாக்கி ஏந்திச் சண்டைபோட்டுச் சாவதென்பது எல்லோராலும் முடியாது. ஏன், எங்களால்கூட அந்த ஒரு நாள் மட்டும் 'இன்னும் கொஞ்ச நேரம் நிண்டா நான் இயக்கத்துக்குப் போடுவன்' என்று சொல்லவும், அதை நினைவுகூர்ந்து வெளிநாட்டில் இருந்துகொண்டு ஒரு குற்ற உணர்ச்சியோடு எழுதவும் முடிந்ததேயொழிய, அவர்கள் செய்த தியாகங்களில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூடச் செய்யமுடியவில்லை.

பெருந்தலைகளை விட்டுவிடுங்கள். எத்தனை அப்பாவி இளைஞர்கள், பெயர் தெரியாத, முகம் தெரியாத இளைஞர்கள், 30 வருடங்களாக எங்கள் இனத்தை நிலைத்து நிற்க வைக்கின்ற நோக்கில் செத்துப்போயிருக்கிறார்கள்? அப்படிப்பட்ட இளைஞர்களை நினைத்து இன்றைக்கும் எத்தனையாயிரம் குடும்பங்கள் அழுது கொண்டிருக்கின்றார்கள்? அந்தக் குடும்பங்கள் தாம் இழந்த செல்வங்களை நினைவுகூர்கிற ஒரு துக்க நாள், எங்களுக்கெல்லாம் கொண்டாட்டமாகத் தெரிகிறதல்லவா? அன்றைக்குப் பிரபாகரன் மறுபடி தோன்றுவார்... இல்லையில்லை பொட்டு அம்மான் மறுபடி தோன்றுவார் என்று புனைவுகள் எழுத அந்தத் துக்க தினம் எங்களுக்குப் பயன்படுகிறதல்லவா? இப்போதுதான் பிரபாகரன் மீது எனக்கு அடக்கமுடியாத கோபம் வருகிறது. இப்படி ஒரு ஈன இனத்துக்காக (என்னையும் சேர்த்து) 30 வருடங்களாகப் போராட்டம் நடத்திய அவரைவிட ஒரு அடி முட்டாள் அவருக்கு முன்னும் பிறக்கவில்லை, இனியும் பிறக்கப்போவதில்லை.

நவம்பர் எங்களுக்கு முக்கியமான மாதம்தான், என்றைக்கும். ஆனால் அதை ஒரு கொண்டாட்டமான மாதம் என்று சொல்வது எமக்கு நாமே செய்யும் மாபெரும் துரோகம்.

பி.கு: முதலாம் உலகப்போர் முடிவுக்கு வந்த நவம்பர் 11, 11:00 இங்கே அனுஷ்டித்தார்கள். ஒரு கணம் நாடு முழுவதும் ஸ்தம்பித்து நின்றது. அந்த நாளுக்கு முந்திய வாரங்கள் எதிலும் எந்த ஊடகத்திலும் Remembrance Day Celebrations என்ற வார்த்தை பிரயோகிக்கப்படவில்லை. நாங்கள் மேல் நாட்டவரைவிட இதிலும் பின்தங்கித்தான் போய்விட்டோம்Justify Full

24 comments:

  1. //
    இணையத்தில்கூட இரண்டொரு குரல்கள் மட்டுமே இந்தக் ‘கொண்டாட்டம்' என்ற சொற்பிரயோகம் பற்றிய எதிர்ப்புக்களை எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    //


    நான்கூட பார்த்தேன்

    பத்திரிகை விற்பனைக்காக மட்டும் ஈழப் பிரச்னையை முன்னிறுத்திப் பிழைப்பு நடாத்தும் ஈனப் பிறப்புக்களாகவே நான் ஒருசில தமிழ்நாட்டுச் சஞ்சிகைகள் பத்திரிகைகள் தொலைக்காட்சிகளை நோக்குகிறேன்.

    அதன் விளைவுதான் இத்தகைய சொற்பிரயோகம்.

    பட்டால்தானே நோவு தெரியும்.

    ReplyDelete
  2. கொண்டாட்டம் என்ற சொல் உறுத்தலாய்த் தான் இருக்கிறது.

    ReplyDelete
  3. மனதை கனக்கசெய்துவிட்டாய் உடன்பிறப்பே!!
    :-(

    ReplyDelete
  4. ///பத்திரிகை விற்பனைக்காக மட்டும் ஈழப் பிரச்னையை முன்னிறுத்திப் பிழைப்பு நடாத்தும் ஈனப் பிறப்புக்களாகவே நான் ஒருசில தமிழ்நாட்டுச் சஞ்சிகைகள் பத்திரிகைகள் தொலைக்காட்சிகளை நோக்குகிறேன்.
    ///

    தியா... நான் இங்கே தமிழ்நாட்டு ஊடகங்களை மட்டும் சாடவில்லை. புலம்பெயர் நாடுகளிலிருந்து இயங்கும் ஈழத்தவர் ஊடகங்கள்மீதே என்னுடைய கோபம் அதிகமாக இருக்கிறது

    ReplyDelete
  5. நன்றி சஞ்சீ

    ReplyDelete
  6. பாலா..
    உங்களுக்கும் எனக்கும் இன்னும் சிலருக்கும் உறுத்தி என்ன பிரயோசனம் தலைவா??? 'மாவீரர் தினக் கொண்டாட்டத்தில என்ர பிள்ள ஆடப்போகுது' என்று சொல்லி பிள்ளைகளைத் தயார் செய்யும் ஜென்மங்கள் உட்பட இன்னும் பலபேருக்கு உறுத்தவேண்டுமே

    ReplyDelete
  7. ///மனதை கனக்கசெய்துவிட்டாய் உடன்பிறப்பே!!///

    ஏன் கலை ஏன்???

    ReplyDelete
  8. நவம்பர் 27 அன்று மாவீரர் துயிலும் இல்லம் போனவர்களுக்கு மட்டுமே அந்நாளின் முக்கியத்துவம் புரியும். அதன் பின்னணியில் நாம் இழந்த எம்முறவுகள், அவர்களை நினைத்து இன்றும் கல்ங்கிக் கொண்டிருக்கும் மாவீரர்களின் உறவுகளின் நிலையும் விளங்கும். அவற்றை வார்த்தைகளில் வடிக்க இயலாது. அன்று ஒலிபரப்பாகும் ‘தாயகக் கனவொடு...’ பாடலின் வரிகள் உயிரையே உருக்குவதாக இருக்கும்.

    ReplyDelete
  9. உண்மையை ஆராய்ந்து சொல்லியிருக்கிறீர்கள். மாவீரரின் வலியை,உணர்ந்தவர்களுக்கு தான் புரியும்.

    ReplyDelete
  10. இழப்பின் வலி இழந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

    மனோ

    ReplyDelete
  11. அருமை சோதரா.. நானும் பல இடங்களில் இதைப் பார்த்து மனதில் வெம்பி இருக்கிறேன்.

    உங்கள் பல வசனங்கள் மனதை தொட்டன.
    உண்மைகள் இன்று உறைக்கின்றன.

    ReplyDelete
  12. நன்றி கலகலப்ரியா

    ReplyDelete
  13. உண்மை பால்குடி

    ReplyDelete
  14. நன்றி நிலாமதி அக்கா

    ReplyDelete
  15. ///அருமை சோதரா.. நானும் பல இடங்களில் இதைப் பார்த்து மனதில் வெம்பி இருக்கிறேன்.

    உங்கள் பல வசனங்கள் மனதை தொட்டன.
    உண்மைகள் இன்று உறைக்கின்றன.///

    ஊடகவியலாளர்கள் இன்னும் கொஞ்சம் பொறுப்புணர்வோடு செயற்படலாம் அல்லவா லோஷன் அண்ணா? (அதற்காக ரிஸ்க் எடுத்து சிறைவாசம் காணச் சொல்லவில்லை. கொஞ்சம் பொறுப்புணர்வே போதும்)

    ReplyDelete
  16. உண்மை உண்மை உண்மை

    ReplyDelete
  17. //'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' பாடல் ஒலித்தது. சத்தியமாக இசையை ரசிக்க முடியவில்லை. மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்க ஒரு இனம்புரியாத உணர்வு நாடி நரம்பெங்கும் ஓடிப் பரவும். தாய்மார்கள், சகோதரிகள், மனைவிகள், காதலிகள் என்று பலர் புலம்புவார்கள். ‘ஆம்பிளை அழக்கூடாது' என்ற கட்டமைப்பு உடைந்து தந்தைகளதும், சகோதரன்களதும் கண்கள் குளமாகியிருக்கும். பார்த்துக்கொண்டிருக்கிற எம் கண்களும்தான்.//

    2004ம் ஆண்டு எனக்கும் அந்த அனுபவம் இருக்கின்றது... கண்கள் என்னையறியாமல் குளமாகியது அன்றுதான்..

    மாவீரன் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்.. சத்தியமான உண்மை. தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே அவர்கள்..

    அத்த நான் ஒரு புனிதநாள்.. தலைவன் இருக்கும் வரை அவ்வாறுதான் பேணிவந்தான்.. நாமும் அவ்வாறு பேணுவதுதான் அந்த சந்தனப் பேழைகளுக்கும் அவர்களின் ஆத்மாத்த தியாகத்திற்கும் நாங்கள் செய்கின்ற நன்றிக்கடனும் ஞாபகச்சின்னமும்..

    அவர்களின் தியாகங்களை புலத்தில் இருந்துகொண்டு அதனைக் கொண்டாட்டம் என்று கூறிக்கொண்டிருப்பவர்களுக்கு எங்கே அந்த மாவீரனின் தியாகங்கள் புரியப்போகின்றது.. காத்திரமாக பதிவு.. மீண்டும் அந்த நாட்களை கண்முன் நிறுத்தியிருந்தீர்கள்..

    ReplyDelete
  18. //சுகமான வாழ்க்கையைத் துறந்து, துப்பாக்கி ஏந்திச் சண்டைபோட்டுச் சாவதென்பது எல்லோராலும் முடியாது. ஏன், எங்களால்கூட அந்த ஒரு நாள் மட்டும் 'இன்னும் கொஞ்ச நேரம் நிண்டா நான் இயக்கத்துக்குப் போடுவன்' என்று சொல்லவும், அதை நினைவுகூர்ந்து வெளிநாட்டில் இருந்துகொண்டு ஒரு குற்ற உணர்ச்சியோடு எழுதவும் முடிந்ததேயொழிய, அவர்கள் செய்த தியாகங்களில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூடச் செய்யமுடியவில்லை//


    நண்பன் ஒருவன் சொல்லுவான் அவர்களை விமர்சிப்பற்கு எங்கள் ஒருவருக்குமே தகுதிகிடையாது என்று.. நிட்சயமான வரிகள்..

    ReplyDelete
  19. வணக்கம் கிருத்திகன்,
    உணர்வுபூர்வமான நேரங்களைக் கூட வணிகரீதியாக அணுகும் எம்மவர் சிலரல்ல பலரை பார்க்கும்போது...வேதனை தான் எஞ்சுகிறது.
    கட்டுரை காலத்தின் கோலத்தை காட்டி நிற்கிறது.

    ReplyDelete
  20. உங்களுக்கு 2003 மாவீரர் தினத்தன்று தோன்றியது எனக்கு இன்று உங்கள் பதிவை படித்த பிறகு தான் தோன்றியது. (இது சத்தியமான வார்த்தை) உங்களுக்கு எனது ஆயிரமாயிரம் நன்றிகள்

    ReplyDelete
  21. //பிரபாகரன் மீது எனக்கு அடக்கமுடியாத கோபம் வருகிறது. இப்படி ஒரு ஈன இனத்துக்காக (என்னையும் சேர்த்து) 30 வருடங்களாகப் போராட்டம் நடத்திய அவரைவிட ஒரு அடி முட்டாள் அவருக்கு முன்னும் பிறக்கவில்லை, இனியும் பிறக்கப்போவதில்லை.//

    உண்மை தான்.

    //நண்பன் ஒருவன் சொல்லுவான் அவர்களை விமர்சிப்பற்கு எங்கள் ஒருவருக்குமே தகுதிகிடையாது என்று.. நிட்சயமான வரிகள்.//

    ஆனால், இவர்களை எல்லாம் சேர்த்தது தானே இயக்கம். இயக்கத்தை எத்தனை பேர் இன்னும் சாகடிச்சுக் கொண்டிருக்கிறார்கள்.

    பெரும்தலைகளையும் எப்படி ஒட்டு மொத்தமாக குற்றம் சொல்லலாம். எனக்கும் ஒரு சிலரில் விசனம் இருக்கு. ஆனால், அவர்களில் சிலருக்கும் உடலில் ஒரு இடம் கூட காயம் இல்லாமல் இருக்கவில்லை. ஒரு முறை வைத்தியசாலையில் பார்த்திருக்கிறேன். அதன் பிறகு இவர்களும் மனிதர்கள் தானே என்று மண்டையில் உறைத்தது.

    ReplyDelete

சரி.. சமாதானமாப் போவோம்... பின்னூட்டம் போட்டுட்டுப் போங்க...