Tuesday, 23 June 2009

வாசுவும் கடல்புறாவும்

பதின்ம வயதுகளின் பிற்பகுதி அது. யாழ்ப்பாணத்தில் கூட விஜய் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் நிகழ்ந்த காலம் அது. அப்படிக் 'கனவில் உறையும் சினிமா' உலகில் இளைஞர்கள் மூழ்கியிருந்த காலத்தில் ‘கில்லியில் சிவாஜி நடித்திருந்தால் இன்னும் சூப்பராய் இருந்திருக்கும்' போன்ற தொனியில் பேசி சிவாஜியை அணுவணுவாய் ரசிக்கும் ஒரு ஜீவன் எங்கள் சமவயதில் இருந்தது என்றால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும். 'Karoke' இசைத் தட்டுக்களை உபயோகித்து 'சர்க்கரை நிலவே' ‘கொக்கோ கோலா பிரவுணு கலருடா' என்று உயர்தர வகுப்பு மாணவ மாணவியர் ஒன்று கூடல்களில் மாணவர்கள் மாணவிகளை மயக்க முயலும் போது, 'சோதனை மேல் சோதனை' பாடிய ஜீவனை சந்தித்திருக்கிறீர்களா? நான் சந்தித்திருக்கிறேன். ஆனந்த விகடன், குமுதம் மூலமாக பல எழுத்தாளர்கள் அறிமுகமாகி அவர்களின் எழுத்துக்களையும் வெகுசனப்பத்திரிகை எழுத்துக்களையும் நாங்கள் வாசிக்கத் தொடங்கிய காலத்தில், ‘சாண்டில்யன்' மீது காதலாகிக் கண்ணீர் மசிந்த ஜந்தைப் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன். அதுதான்.. இல்லை இல்லை அவன் பெயர் வாசு.

வாசுவின் சுவைகள் வித்தியாசமானவை. அவன் பிறந்தது ‘பண்டாரிகள்' என்று அழைக்கப்படும் சுத்த சைவ உணவு உண்ணும் சமூகத்தில். இரண்டு மூத்த அண்ணன்கள், இரண்டு அக்காக்கள். கடைக்குட்டி இவன். இவனை முதன் முதலில் நான் கவனித்தது ஆறாம் வகுப்பில். எல்லோருக்குமே புதிய பள்ளி. புதிய நாள். புதிய நண்பர்கள். புதிதாகத் தெரியப்பட்ட வகுப்புத் தலைவனிடம் கணீர் குரலில் யாரோ முறைப்பாடு சொல்ல திரும்பிப் பார்த்தேன். முதல் பார்வையிலேயே வாசுவில் ஒரு வித்தியாசமான ஈர்ப்புத் தென்பட்டது. கன்னங்கரேல் என்ற நிறம். களையான முகம். நெற்றியில் சந்தனப் பொட்டு, மிகச்சின்ன விட்டமுடைய வட்டமாக. அதன் நடுவே அதிலும் சிறிய விட்டத்தில் குங்குமப் பொட்டு. காமா சோமா என்று பொட்டு வைத்துப் போகும் எங்கள் மத்தியில் வினைகெட்டு நேர்த்தியாகப் பொட்டு வைத்திருந்தான்.

எனக்கு இந்த 'கிச்சு கிச்சு' மூட்டினால் படு கோபம் வரும். ஆனால் கிச்சு கிச்சு மூட்டியே நண்பனானவன் வாசு. வாசுவுக்கு தமிழில் பேரார்வம். கவிதை கட்டுரை எல்லாம் வரைவான். நாங்கள் கிரிக்கெட் பற்றிப் பேசினால் அவன் வரலாற்றுப் புதினங்கள் பற்றிப் பேசுவான். எங்கள் ரசனை தேவா, வித்யாசாகர், பரத்வாஜ், ரஹ்மான், ராஜா என்று மாறியபோது அவனுக்கு டி. எம். சௌந்திரராஜனையும், சீர்காழி கோவிந்தராஜனையும் மட்டுமே பிடித்திருந்தது. சிவாஜி கணேசனின் நடிப்புப் பற்றி சிலாகித்துப் பேசி, மஜிந்தனிடமும் நிதியிடமும் வாங்கிக்கட்டிக் கொள்வான். ஒரு மென்மையான ஒரு தலைக்காதல் கூட அவனுக்கு இருந்தது. பள்ளி மேடைகளில் வாசு கலந்து கொண்ட நாடகங்களும், பேச்சுப் போட்டிகளும், பட்டிமன்றங்களும் அதிகம். அவனது பேச்சிலும் , நடிப்பிலும் ஒரு மிகைப்படுத்தப் பட்ட தனமை காணப்பட்டாலும் தமிழ்ப் பள்ளி மேடைகளில் அவனுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. (கீழுள்ள படத்தில் நாடகமொன்றில வாசு. இந்த நாடகத்தை நான் பார்க்கவில்லை. சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் அவன் போட்ட யமன் வேஷம் இது என்று அவன் சொல்லித் தெரியும்)
வாசுவின் ஆன்மீக ஈடுபாடு கூட மிகையானது. அதுவும் ஒரு கொஞ்சக் காலம், சின்மயானந்தா என்றொரு மிஷன், அதில் ஒரு சாமியார்; இரண்டுமே வாழ்க்கை என்பது போல் திரிந்தான். என்னுடைய அப்பாவுடன் பருத்தித்துறை நீதிமன்றில் வேலை பார்த்த அவனின் தமக்கை அடிக்கடி அப்பவிடம் சொல்லிக் கவலைப் படுவாராம் இவனது ஓவர் ஆன்மீக ஈடுபாடு பற்றி. இது பற்றியும் சொல்லி வாசுவை நக்கல் செய்வதுண்டு. சாண்டில்யனின் எழுத்துக்களில் தீராக்காதல் அவனுக்கு. அதிலும் அவரது ‘கடல் புறா' நாவலை வாசிப்பதே அவனது வாழ்வின் முக்கிய லட்சியமாக ஒரு கொஞ்சக் காலம் இருந்தது. (சாண்டில்யன் எழுதிய ஏதோ ஒரு நாவலை அவனது புத்தகப் பையிலிருந்து எடுத்து மேய்ந்தேன். ஒரு அரசன் இரு மாதர்களுடன் சரசமாடுவதை இரண்டரைப் பக்கத்துக்கு வர்ணித்திருந்தார். உடலில் சில பகுதிகள் கல்லாவது போல் தோன்றியதால் மூடி வைத்துவிட்டேன்)

வாசுவின் கடல்புறாக் காதல் அவன் மீது ஒரு பெரிய பழியைக் கொண்டுவந்தது. அப்போது நாங்கள் 13ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். பள்ளிகளில் மாணவத் தலைவர்கள் (Prefects) தெரிவது வழமை. மற்ற மாணவர்களுக்கு இல்லாத சில உரிமைகள் மாணவத் தலைவர்களுக்கு உண்டு. அந்த மாணவர் தலைவர் குழுமத்தில் நானும் வாசுவும் கூட இருந்தோம். அப்போது எங்கள் பாடசாலையில் ‘இல்ல மெய்ல்லுனர்ப் போட்டி' (Athletics Meet)காலம். பாடசாலை வளாகத்துள் மாணவர்களோ ஆசிரியர்களோ இருக்கமாட்டார்கள். எதாவது தேவை என்றால் கூட, மைதானத்திலிருந்து பாடசாலை வளாகத்துக்கு மாணவர் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே வந்து போகலாம். இப்படிப்பட்ட ஒரு நாளில் பாடசாலை நூலகத்தில் இருந்து சாண்டில்யனின் ‘கடல் புறா' பறந்து போய்விட்டது.

மாணவர் தலைவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் கொஞ்சம் பரபரப்பை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியது. ஆங்காங்கே நின்று கிசு கிசுத்த பலரது வாயில் அவலாய் மெல்லப்பட்டது... வாசு. அந்த தினத்தன்று ஏதோ தேவைக்காக வாசு பாடசாலை வளாகத்துக்கு வந்திருந்தது அவனுக்கு பாதகமாய் போய்விட்டது. ஆனால், ஆதாரம் ஏதுமின்றி யாரும் அவன் தான் கடல் புறாவைக் கிளப்பினான் என்று சொல்லத்துணியவில்லை. எங்கள் உப அதிபர் மட்டும் இந்த விஷயத்தை மாணவர் தலைவர் குழும சந்திப்பில் கலந்துரையாடினார். வாசுவைப் பற்றி மறைமுகமாகக் குத்திக்காட்டினார். வாசுவின் முகத்தைப் பார்த்தேன். சலனமில்லை. திடீரென்று ‘உன்னைப் பற்றித்தான் சொல்லுறன். தெரியாதது மாதிரி நடிக்கிறியே' என்று குண்டைப் போட்டார் உப அதிபர். ‘நானோ சேர்.... எனக்கு ஒண்டும் தெரியாது சேர்' என்று பதறினான் வாசு. அதற்குப் பிறகு நடந்த கலந்துரையாடலில் எதிலுமே மனம் செல்லவில்லை. பதறிக் கொண்டிருந்த வாசுவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சில நாட்களின் பின் வாசுவே சொன்னான். கடல் புறா மூன்று பாகங்களைக் கொண்டது. மூன்று பாகங்களுக்குமான பணத்தை தான் பாடசாலை நிர்வாகத்துக்குச் செலுத்திவிட்டதாகச் சொன்னான். திருடிவிட்டு தன்னை நல்லவனாகக் காட்டுவதற்காக அவன் அப்படிச் செய்ததாகவும் பேசிக்கொண்டார்கள். கிட்டத்தட்ட 1500 ரூபாய் மதிப்புள்ள அந்த மூன்று பதிவுகளையும் திருடி விட்டு பின்னர் பணம் கட்டுவதற்குப் பதில் அவனால் அந்த மூன்று பதிப்பையும் புதிதாக வாங்கியிருக்க முடியும் என்பது அப்படிப் பேசியவர்களுக்குப் புரிந்திருக்க நியாயமில்லை. எனக்குத் தெரிந்த வாசு அப்படித் திருடியிருக்க மாட்டான் என்று இன்றைக்கும் உத்தரவாதம் தர நான் தயார். எனக்குத் தெரியாத முகம் ஏதாவது வாசுவுக்கு இருந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அந்தத் தெரியாத முகம் பற்றி எனக்கு எவ்விதமான அக்கறையுமில்லை.

14 comments:

  1. I hope Mr.Vasu should be innocent. You are the symbol of a good friend.

    Thanks
    Nathan

    ReplyDelete
  2. நல்ல நினைவுகள். நன்றி அவனுக்கு ......

    ReplyDelete
  3. நான் பழகி அறிந்து கொண்ட வாசுவும் இதனைச் செய்திருக்க மாட்டான்.
    // எனக்குத் தெரியாத முகம் ஏதாவது இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அந்தத் தெரியாத முகம் பற்றி எனக்கு எவ்வித அக்கறையும் இல்லை.
    மிக மிகப் பிடித்தமான வரிகள். என்னுடைய நிலைப்பாடும் இதுவே...

    ஒருத்தனை குற்றம் சுமத்துவது இலகுவான விடயம். அவன் குற்றவாளியாக இல்லாத சந்தர்ப்பத்தில் அவன் மனம் படும் வேதனைகளும் அதனால் ஏற்படும் விரக்தியும் அவனால் மட்டுமே உணர முடியும்.

    அந்த உப தலைவர் எமக்குத் தந்த வாக்குறுதிகளும் அவை காற்றில் பறந்த விதமும் எமக்கு மட்டுமே தெரிந்த விடயங்கள்...

    மினக்கெட்டு - வினைகெட்டு. இன்றுதான் அறிந்து கொண்டேன். நன்றி கீத்.

    ReplyDelete
  4. அது உபதலைவர் அல்ல... உப அதிபர் பால்குடி... உப தலைவர் என்றால் அது யானை தன் தலையில் தானே சேறு போட்டது போல் ஆகிவிடும்

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உமாஷங்கர் மற்றும் அனானி

    ReplyDelete
  6. "மினக்கெட்டு" என்பது "வினைகெட்டு" என்பதன் திரிபு தானா?
    அப்படியென்றால் எங்களவர் தேவையில்லாத இடங்களிலும் இதனை பாவிக்கிறார்களா?

    ReplyDelete
  7. சாயினி... எனக்கும் சரியாகத் தெரியவில்லை. இருந்தும் என்னுடன் நெருங்கிப்பழகும் தமிழ் ஆசான் ஒருவர் இதைச் சொன்னார்.

    ReplyDelete
  8. Adei...
    வாசு இதுகாறும் நான் தான் உன் நல்ல நண்பன் என்று நினைத்திருந்தேன்... ஆனால்.. கீத் என்னை விஞ்சி விட்டான்..
    U sud be proud of Keith..
    Sik1

    ReplyDelete
  9. keep it up keeth.wen i read tiz story it s like a shortstory from anantha vikatan.nice to se u....sm thng i m expecting fm u as tiz more....he is a nice person..but he hav smthng in litreature..dats all.hey keeth u r writing like old vassu..how u got tiz?ah?

    ReplyDelete
  10. வாசுவுக்கு நல்ல வரவேற்பு... இது தெரிந்திருந்தால் முதலிலேயே ஒரு பதிவு போட்டிருப்பேன்...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரவிந்த்.. மற்றும் அருண்சங்கர்

    ReplyDelete
  11. கல்லூரி அனுபவங்களை இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றோம்

    ReplyDelete
  12. நானும் கடல் புறா பரந்த கதை கேள்விப்பட்டனான். எனக்குத் தெரியும் வாசு இப்பிடிச் செய்யமாட்டான் எண்டு. ஹாட்லியில் நானும் செய்யாத எத்தினையோ விஷயங்களைச் செய்ததாச் சொல்லி தண்டிக்கப் பட்டிருக்கிறன். விசேசமாக பூனைக் குட்டியிண்ட கையில ஆட்சி இருக்கு மட்டும் எனக்கு ஒரே ஆப்புத்தான்.

    ReplyDelete
  13. உளவுத்துறை அதிகாரியாக வேஷம் போட்டால் ....வேஷம் பொருந்துதோ இல்லையோ ....எல்லாரையும் சந்தேகப்படுற மாதிரி காட்டிக் கொள்ள வேண்டும் ! அகப்பட்டது அப்பிராணி என்றால் ...ஆதாரம் உண்டு ...என்பதுபோல மிரட்ட வேண்டும் !.........
    " தாமின்புறுவது உலகின் புறக்கண்டு
    காமுறுவர் கற்றறிந் தார் " - [குறள் 399 ]

    ReplyDelete
  14. உளவுத்துறை அதிகாரியாக வேஷம் போட்டால் ....வேஷம் பொருந்துதோ இல்லையோ ....எல்லாரையும் சந்தேகப்படுற மாதிரி காட்டிக் கொள்ள வேண்டும் ! அகப்பட்டது அப்பிராணி என்றால் ...ஆதாரம் உண்டு ...என்பதுபோல மிரட்ட வேண்டும் !.........
    " தாமின்புறுவது உலகின் புறக்கண்டு
    காமுறுவர் கற்றறிந் தார் " - [குறள் 399 ]

    ReplyDelete

சரி.. சமாதானமாப் போவோம்... பின்னூட்டம் போட்டுட்டுப் போங்க...